வீட்டுக்குள் புகுந்து கோழி முட்டைகளை விழுங்கிய நல்லபாம்பு தூக்கணாம்பாக்கம் அருகே பரபரப்பு
தூக்கணாம்பாக்கம் அருகே வீட்டுக்குள் புகுந்து கோழி முட்டைகளை விழுங்கிய நல்லபாம்பு பிடிபட்டது.
தூக்கணாம்பாக்கம்,
கடலூர் அருகே உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகலட்சுமி (வயது 49). விவசாய கூலி வேலை செய்து வரும் இவர் வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நாகலட்சுமி தனது மகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது கோழிகள் அலறும் சத்தம் கேட்டது. இதை கேட்டு திடுக்கிட்ட நாகலட்சுமி வீட்டில் கோழிகள் அடைக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது, அங்கு நல்ல பாம்பு ஒன்று இருந்தது. அதன் உடலுக்குள் முட்டைகள் உள்ளதுபோல் உப்பிய நிலையில் காணப்பட்டது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த நாகலட்சுமி இதுபற்றி வன ஆர்வலர் கடலூர் செல்லாவுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செல்லா லாவகமாக நல்லபாம்பை பிடித்து வீட்டுக்கு வெளியில் கொண்டு வந்தார். இதையடுத்து சில நிமிடங்களில் அந்த நல்லபாம்பு அடுத்தடுத்து 3 கோழி முட்டைகளை கக்கியது. இதைத்தொடர்ந்து செல்லா அந்த நல்ல பாம்பை ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள வனப்பகுதியில் கொண்டு ேபாய்விட்டார். நல்லபாம்பு வீட்டுக்குள் புகுந்து கோழிகள் இட்ட முட்டைகளை விழுங்கிவிட்டு, கக்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.