பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் 10-ந் தேதி நடக்கிறது.
அரியலூர்:
மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் 2022-23-ம் கல்வியாண்டிற்கான 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இப்பள்ளியில் அரசால் வழங்கப்படும் கல்வி உபகரணங்கள், சீருடை, காலணி, பிரெய்லி புத்தகங்கள் மற்றும் கணித உபகரணங்கள் போன்றவை விலையில்லாமல் பெற்றுத்தரப்படுகிறது. நடைபயிற்சி, விளையாட்டு போட்டிகள், பேச்சுப் போட்டிகள், நடனம், கராத்தே, யோகா, சிலம்பம் போன்ற இதர கலைகள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு மாதந்தோறும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பள்ளியின் விடுதியில் மாணவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு இடமும், ஆரோக்கியமான உணவு மற்றும் தூய்மையான குடிநீர் போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே மேற்காணும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 வயது முதல் 16 வயது வரை உள்ள பார்வை குறைபாடுடைய மாணவ, மாணவிகள் சேர்ந்து பயனடைய ஏதுவாக அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண் 17, தரைத்தளம், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 10-ந் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இவ்வாய்ப்பினை பார்வை குறைபாடுடைய மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.