மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கான சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன்படி வீடு, வீடாக விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 24-ந்தேதி முதல் 2-ந் தேதி வரை முதற்கட்டமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 600 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட ரேஷன்கார்டுதாரர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். இந்த நிலையில் பதிவு செய்யாமல் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம் நேற்று தொடங்கி உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் முதற்கட்ட முகாமில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது. முகாம் காலை 9.30 மணி முதல் 5.30 மணி வரை நடக்கிறது. ஆகையால் பூர்த்தி செய்த விண்ணப்பம், ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, மின்கட்டண ரசீது ஆகியவற்றின் அசல் ஆவணங்களுடன் முகாமுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்' என்று கூறி உள்ளார்.