நாமக்கல்லில்ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு பூஜை
நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையில் இருந்து போதுப்பட்டி செல்லும் சாலையில் காமாட்சி அம்மன் நந்தவனம் அமைந்து உள்ளது. இங்கு 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தினர் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு ஏ.எஸ்.பேட்டை பகவதி அம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மோகனூர் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்து வந்தனர். அதை தொடர்ந்து பிடிமண் எடுத்து சாமிகள் செய்து வழிபாடு நடத்தினர்.
நேற்று மதியம் 12 மணிக்கு மகா பூஜை நடந்தது. இதில் 11 ஆடுகள் பலியிடப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் பெண்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. சமையல் செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் ஆண்களே செய்தனர். சாப்பிட்ட பின்பு மீதமுள்ள சோறு, இலைகள் உள்ளிட்ட அனைத்தையும் அங்கேயே குழிவெட்டி புதைத்து விட்டனர். பின்னர் மண்ணால் செய்யப்பட்ட சாமி உருவங்களை எடுத்து காவிரி ஆற்றில் கரைத்து விட்டனர். இந்த பூஜை அங்கு தொடர்ந்து 20 ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.