அமைச்சர் துரைமுருகனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்
அமைச்சர் துரைமுருகனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் தலைமை தாங்கி பேசினார்.
கூட்டத்தில், தி.மு.க. 15-வது உட்கட்சி பொதுத்தேர்தலில் 2-வது முறையாக ஒருமனதாக கட்சியின் தலைவராக தேர்வு பெற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளராக மீண்டும் ஒருமனதாக தேர்வான நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர்களாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா எம்.பி., அந்தியூர் செல்வராஜ் எம்.பி., கனிமொழி எம்.பி. ஆகியோருக்கு வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பது, வேலூர் மத்திய மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகியை தணிக்கைக்குழு உறுப்பினராக நியமித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, தி.மு.க. பொதுச்செயலாளராக 2-வது முறையாக பதவியேற்ற அமைச்சர் துரைமுருகன் காலை 11 மணியளவில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வருகை தர உள்ளார். அவரை வேலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் திரண்டு வந்து சிறப்பான வரவேற்பு அளிப்பது. வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத்கமிட்டி அமைத்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், எம்.எல்.ஏ.க்கள் ப.கார்த்திகேயன், அமலுவிஜயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு, மேயர் சுஜாதா, முன்னாள் அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய், மாவட்ட பொருளாளர் நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர்கள் தயாநிதி, கதிரேசன், சி.சந்திரசேகரன், பகுதி செயலாளர்கள் சி.எம்.தங்கதுரை, பி.முருகபெருமாள், என்.பரமசிவம், காட்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கருணாகரன், வக்கீல் கே.சம்பத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட துணைச்செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.