ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும்
கூத்தாநல்லூர் அருகே ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும்
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூரை அடுத்த பாரதிமூலங்குடி அருகில் சாலையில் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வளைவு உள்ள இடத்தில் திருவாரூர், மன்னார்குடி, எருக்காட்டூர் செல்லும் 3 பிரிவு சாலைகள் உள்ளன. இந்த சாலை திருவாரூர், மன்னார்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கூத்தாநல்லூர், திருச்சி, தஞ்சை, கும்பகோணம் போன்ற நகர பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதால் ஆபத்தான வளைவில் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்து இருப்பதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவிக்கிறார்கள். 3 பிரிவு சாலை உள்ள இடத்தில் விபத்துகளும் நடந்து வருகிறது. ஆபத்தான வளைவு உள்ள சாலையில் திரும்பும் இடத்தில் சாலை சற்று பள்ளமாகவும் உள்ளது. இதன் காரணமாக சில நேரங்களில் வளைவில் திரும்பும் போது வாகனங்கள் கவிழ்ந்து விடுகின்றன. எனவே ஆபத்தான வளைவில் சாலையை சீரமைப்பு செய்து அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.