சமையல் மாஸ்டருக்கு கத்திக்குத்து


தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 3 பேர் கும்பல் மதுபோதையில் சமையல் மாஸ்டரை கத்தியால் குத்தி மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 3 பேர் கும்பல் மதுபோதையில் சமையல் மாஸ்டரை கத்தியால் குத்தி மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

முன்விரோதம்

தூத்துக்குடி கே.வி.கே நகரைச் சேர்ந்தவர் முகமது அன்வர்ஷா (28). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தூத்துக்குடி பொன்னகரம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அன்வர்ஷா பொன்னகரம் பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றாராம். பின்னர் அந்த பகுதியில் நின்று மது குடித்துக் கொண்டு இருந்தாராம். அதே பகுதியில் கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளான கட்டபெருமாள், ஊமை மாரி ஆகிய 3 பேரும் மது குடித்துக் கொண்டு இருந்தார்களாம்.

கத்திக்குத்து

அப்போது அவ்வழியாக வந்த முகமது அன்வர்ஷாவை, அவர்கள் மதுபோதையில் தடுத்து நிறுத்தி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில், அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த கண்ணன், கட்டபெருமாள், ஊமை மாரி ஆகிய 3 பேரும் சேர்ந்து முகமது அன்வர்ஷாவை கடுமையாக தாக்கி உள்ளனர். தொடர்ந்து கத்தியால் அவரை சரமாரியாக குத்தி உள்ளனர். பலத்த காயங்களுடன் முகமது அன்வர்ஷா மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடினாராம். இதனை தொடர்ந்து அந்த 3 பேரும் சேர்ந்து முகமது அன்வர்ஷாவின் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்து எரித்து உள்ளனர். அந்த பகுதியில் நின்ற மற்றொரு காரையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்களாம்.

கைது

அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய முகமது அன்வர்ஷா சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணன், கட்டபெருமாள், ஊமை மாரி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story