சமாதானப்படுத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு பீர்பாட்டில் குத்து


சமாதானப்படுத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு பீர்பாட்டில் குத்து
தினத்தந்தி 25 Oct 2022 6:34 PM GMT (Updated: 26 Oct 2022 10:30 AM GMT)

திருச்சியில் பட்டாசு வெடித்த போது, ஏற்பட்ட தகராறை சமாதானம் செய்ய முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு பீர்பாட்டில் குத்து விழுந்தது.

திருச்சி

திருச்சியில் பட்டாசு வெடித்த போது, ஏற்பட்ட தகராறை சமாதானம் செய்ய முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு பீர்பாட்டில் குத்து விழுந்தது.

தாக்குதல்

திருச்சி கோட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பன் தீபாவளி அன்று இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். திருச்சி-மதுரை ரோடு ராமகிருஷ்ணா பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, வள்ளுவர் நகரை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் கல்யாணசுந்தரபுரம் ஜீவா நகரை சேர்ந்த கண்ணன் என்பவரை கடுமையாக தாக்கிக்கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பன் இரு தரப்பினரையும் விலக்கி விட்டு சமாதானம் செய்ய முயன்றார். அப்போது, வள்ளுவர் நகரை சேர்ந்த ஒரு வாலிபர், பீர் பாட்டிலால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பன் கையில் குத்தி கிழித்தார். இதனால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பன் வலியால் துடித்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், படுகாயம் அடைந்த சுப்பனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது கையில் 5 தையல் போடப்பட்டன.

இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன், சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அப்துல்லா உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கண்ணன் என்பவர் பட்டாசு வெடித்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த அப்துல்லா உள்ளிட்ட சிலர் கண்ணனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி உள்ளனர். இந்த சமயத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பன் சமாதானப்படுத்த முயன்ற போது, பீர்பாட்டில் அவருக்கு குத்து விழுந்தது என தெரியவந்தது. இந்த சம்பவம் கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story