வாழப்பாடி அருகேநரி முகத்தில் விழிக்கும் வினோத திருவிழாஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு


வாழப்பாடி அருகேநரி முகத்தில் விழிக்கும் வினோத திருவிழாஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு
x

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கொட்டவாடி கிராம மக்கள் நரி முகத்தில் விழிக்கும் வினோத திருவிழாவை கொண்டாடினர். ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட நரிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

சேலம்

வாழப்பாடி,

நரிப்பொங்கல்

தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராமங்களில் நரியை தெய்வமாக வணங்கி வினோத வழிபாடு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று வாழப்பாடி அருகே உள்ள கொட்டவாடி கிராம மக்கள் நரி முகத்தில் விழிக்கும் நரியாட்டம் என்று சொல்லக்கூடிய நரிப்பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.

நேற்று காலை கொட்டவாடி கிராம மக்கள் நரி பிடிக்கும் வலையுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று விவசாய நிலங்களில் வலைகளை விரித்து வைத்தனர். வலையில் சிக்கிய வங்காநரியை கூண்டில் அடைத்து ஊர்வலமாக மேளதாளத்துடன் தூக்கி சென்றனர். இப்பகுதி பெண்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட நரி முகத்தில் விழித்து அதற்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

தை மாதத்தில் புதிய பயிர் சாகுபடி செய்வதற்கு முன்பு, நரி முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும், விளைச்சல் அதிகரிக்கும், நல்ல மழை பெய்து விவசாயம் மற்றும் அதனை சார்ந்த அனைத்து தொழில்களும் செழிக்கும் என்ற நம்பிக்கை இந்த கிராம மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வருகிறது.

அந்த வகையில் தான் நேற்று நரி பிடித்து வரப்பட்டு ஊர்வலமாக எடுத்து ெசல்லும் வினோத திருவிழா நடத்தப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இதனிடையே ஊர்வல முடிவில் அந்த நரியை மீண்டும் பிடித்த இடத்திலேயே கொண்டு சென்று விட்டு விட்டதாக கிராம மக்கள் கூறினர்.

வனத்துறை விசாரணை

நரிப்பொங்கல் குறித்து வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் கூறும் போது, 'வனஉயிர் பாதுகாப்பு சட்டத்தின் படி நரியை பிடித்தாலோ துன்புறுத்தினாலோ 7 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளோம். இருப்பினும் நரியை வைத்து கொட்டவாடி கிராம மக்கள் பொங்கல் கொண்டாடியது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்றார்.


Next Story