பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிபாடு
தா.பேட்டை அருகே அச்சப்பன் கோவில் விழாவில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிபாடு நடைபெற்றது.
தா.பேட்டை அருகே அச்சப்பன் கோவில் விழாவில் பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிபாடு நடைபெற்றது.
வினோத வழிபாடு
தா.பேட்டை அருகே வாளசிராமணி ஊராட்சி வெள்ளாளப்பட்டி கிராமத்தில் உள்ள அச்சப்பன் கோவிலில் ஆண்டு தோறும் ஆயுதபூஜை மறுநாள் விஜயதசமி அன்று பெண்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் வினோத வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழிபாடு நடத்தப்படாமல் இருந்தது.
இந்த ஆண்டு நேற்று நடைபெற்ற விழாவில் திரளான பெண்கள் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு அச்சப்பன், அகோர வீரபத்திரன், மதுரைவீரன், பாப்பாத்தி, மகாலட்சுமி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கு பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் கோவிலில் இருந்து அச்சப்பன் மற்றும் அகோர வீரபத்திரன் உள்ளிட்ட சுவாமிகளை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பக்தர்கள் வாண வேடிக்கையுடன் அருகில் உள்ள காட்டு கோவிலுக்கு சுமந்து சென்றனர்.
சாட்டையால் அடித்தார்
அப்போது கோவிலை சேர்ந்த சேர்வைகாரர்கள், பூசாரிகள் பாரம்பரிய உடை அணிந்து தப்பு அடித்து நடனம் ஆடினர். மேலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. அந்த சமயத்தில் காட்டு கோவில் திடலில் நீண்ட வரிசையில் தலைமுடிகளை அவிழ்த்து கைகளை உயர்த்தி மண்டியிட்டபடி பெண்கள் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த கோவில் பூசாரி பெண்களின் கைகளில் சாட்டையால் அடித்தார். ஒரு சில பெண்கள் நான்கு அல்லது ஐந்துக்கும் மேற்பட்ட சாட்டையடி வாங்கினர். பின்னர் சாட்டையடி வாங்கிய பெண்கள் கோவிலுக்கு சென்று முகத்தில் தீர்த்தம் தெளித்தும், விபூதி பிரசாதம் வாங்கி சென்றனர். இந்த அச்சப்பன் கோவிலில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்குவதால் காத்து கருப்பு, பில்லி, சூனியம் பேய் பிடித்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்து கொள்வதாகவும், திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் சுவாமியிடம் வேண்டி கொண்டு சாட்டையால் அடி வாங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று நம்புவதாக பக்தர்கள் தெரிவித்தனர். இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.