கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
இந்து மக்கள் கட்சி சார்பில், கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.
இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தபால் அனுப்பும் போராட்டம் திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு நடந்தது. இந்த போராட்டத்துக்கு மாநில இளைஞரணி துணை தலைவர் மோகன் குமார் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொதுச்செயலாளர் மாசாணம், இளைஞரணி ஒன்றிய தலைவர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை தபால் அலுவலகம் முன்பு இருந்த பெட்டியில் போட்டனர். அந்த மனுக்களில், தமிழகத்தில் விஷ சாராயத்தை குடித்த 30-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரையில் நடந்த சித்திரை திருவிழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும். தென்னை, பனை மரத்தில் விவசாயிகள் கள் இறக்க அனுமதி அளிக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.