நிரந்தர மக்கள் கோர்ட்டு மூலம் சான்றிதழ் பெற்ற மாணவர்


நிரந்தர மக்கள் கோர்ட்டு மூலம் சான்றிதழ் பெற்ற மாணவர்
x

நெல்லையில் நிரந்தர மக்கள் கோர்ட்டு மூலம் மாணவர் ஒருவர் 6 ஆண்டுகளுக்கு பிறகு சான்றிதழ் பெற்றார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை கீழநத்தம் வடக்கூரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ''நான் நெல்லை அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 2016-2017-ம் ஆண்டு மெக்கானிக் பிரிவில் சேர்ந்தேன். பின்னர் எனது தாய் இறந்து விட்டதால் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் கிளீனராக வேலை செய்து வந்தேன். எனவே கல்லூரியில் சேரும்போது கொடுத்த எனது எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்று சான்றிதழ் ஆகியவற்றை திரும்ப கேட்டபோது ரூ.30 ஆயிரம் செலுத்தினால்தான் தருவதாக கல்லூரி நிர்வாகத்தினர் கூறினர். எனது சான்றிதழ்களை பெற்றுத்தர வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சமீரா, அந்த கல்லூரி முதல்வருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். தொடர்ந்து கல்லூரி சார்பில் மக்கள் தொடர்பு அலுவலர் ஆஜராகி, மாணவர் கல்வி கட்டணத்தை செலுத்தும்பட்சத்தில் சான்றிதழ் கொடுக்க தயாராக இருப்பதாக கூறினார். இதையடுத்து ராமகிருஷ்ணன் ரூ.2 ஆயிரத்தை நிரந்தர மக்கள் கோர்ட்டு மூலமாக கல்லூரியில் செலுத்தினார். தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சான்றிதழ்களை கோர்ட்டில் ஒப்படைத்தது. நீதிபதி சமீனா அந்த சான்றிதழ்களை ராமகிருஷ்ணனிடம் வழங்கினார். நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கை மூலம் மாணவருக்கு 6 ஆண்டுகளுக்கு பிறகு சான்றிதழ்கள் கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story