வீட்டில் இன்குபேட்டரை தயாரித்து கோழிமுட்டைகளை குஞ்சு பொரிக்க செய்த மாணவர்
சாத்தான்குளத்தில் வீட்டில் இன்குபேட்டரை தயாரித்து கோழிமுட்டைகளை மாணவர் குஞ்சு பொரிக்க செய்தார்.
தட்டார்மடம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். விவசாயி. இவருடைய மகன் நிவாஸ் (வயது 15), தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துள்ளார். இவரது வீட்டில் நாட்டுக்கோழி முட்டைகளை அடைகாத்து வந்தது. இந்த நிலையில் நாட்டுக்கோழி திடீரென்று மாயமானதால் முட்டைகள் குஞ்சு பொரிக்க முடியாத நிலையில் இருந்தது.
இதனால் வேதனை அடைந்த மாணவர் நியாஸ், முட்டைகளை குஞ்சு பொரிப்பதற்காக வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு தானே இன்குபேட்டர் தயாரித்தார். அட்டை பெட்டி, தெர்மாகோல், வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் தெர்மோஸ்டாட் கருவி போன்றவற்றின் மூலம் எளிய இன்குபேட்டரை வடிவமைத்து, அவற்றில் முட்டைகளை அடைகாக்க செய்தார். குறிப்பிட்ட நாட்களில் முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பொரித்து வெளிவந்தன. இதனால் மகிழ்ச்சி அடைந்த மாணவர் நியாஸை குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியினர் பாராட்டினர்.