பள்ளி கழிவறையில் மாணவியை பாம்பு கடித்தது


பள்ளி கழிவறையில் மாணவியை பாம்பு கடித்தது
x

குடியாத்தம் அருகே பள்ளி கழிவறையில் மாணவியை பாம்பு கடித்தது.

வேலூர்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஆலாம்பட்டரை கிராமத்தை சேர்ந்தவர் சிவஞானம். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் பூவிகா (வயது 13). குடியாத்தம் அடுத்த ஓலக்காசி கிராமத்தில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் மாணவி பூவிகா பள்ளிக்கு சென்றார். அங்கு சக மாணவிகளுடன் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது கழிவறை பகுதியில் இருந்த பாம்பு ஒன்று பூவிகா காலில் கடித்து உள்ளது.

தகவல் அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர் கோகுல் என்பவர் உடனடியாக மாணவியை மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மாணவியை பாம்பு கடித்த தகவல் அறிந்ததும் தலைமை ஆசிரியர் மாயகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா, ஒன்றியக் குழு உறுப்பினர் சூரியகலா மனோஜ்குமார் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று மாணவிக்கு ஆறுதல் கூறினர்.

மேலும் ஆதிதிராவிட நலத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் பள்ளியை சுற்றி முட்புதர்களும், நிலங்களும் இருப்பதால் விஷப்பாம்புகள் அடிக்கடி பள்ளி வளாகத்தில் உலா வருவதாக தெரிவித்தனர்.


Next Story