திராவகம் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவன் சிகிச்சை பலனின்றி சாவு


திராவகம் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவன் சிகிச்சை பலனின்றி சாவு
x

களியக்காவிளை அருகே திராவகம் கலந்து கொடுத்த குளிர்பானத்தை குடித்த 6-ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இதையடுத்து சக மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே திராவகம் கலந்து கொடுத்த குளிர்பானத்தை குடித்த 6-ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இதையடுத்து சக மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

6-ம் வகுப்பு மாணவன்

களியக்காவிளை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட படந்தாலுமூடு அருகே உள்ள மெதுகும்மல் நுள்ளிகாடு பகுதியை சேர்ந்தவர் சுனில். இவருடைய மனைவி சோபியா. இவர்களுக்கு அஸ்வின் (வயது 11) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு.

இதில் அஸ்வின் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பும், அவரது தங்கை 5-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

உடல்நலக்குறைவு

இந்தநிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி காலையில் வழக்கம் போல் அஸ்வின் பள்ளிக்கு சென்றான். மதியம் அஸ்வின் உணவு சாப்பிட செல்லும் போது, அதே பள்ளியின் சீருடை அணிந்த மாணவர் ஒருவர் குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். அதை வாங்கி அஸ்வின் குடித்துள்ளார். அதன்பின்னர் அஸ்வின் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றபோது திடீரெ உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதுபற்றி அஸ்வினிடம் பெற்றோர் கேட்டபோது, நடந்தவற்றை கூறினார். நேரம் செல்லச்செல்ல அஸ்வின் வலியால் அலறி துடித்தான்.

திராவகம் கலந்த குளிர்பானம்

இதையடுத்து அஸ்வினை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு ரத்தம் மற்றும் உணவு மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குளிர்பானத்தில் திராவக தன்மை அதிகம் கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாணவனுக்கு குடல், தொண்டை மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டது. மாணவனின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் உயிருக்கு போராடிய மாணவன் அஸ்வினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சக மாணவர்களிடம் பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தி வந்தனர். ஆனாலும் குளிர்பானத்தில் திராவகம் கலந்து கொடுத்த மாணவர் யார்? என்பது பற்றி எந்த தகவலும் கிடைக்கவிலை.

பரிதாப சாவு

இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மாணவன் அஸ்வின் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். அஸ்வின் இறந்ததை அறிந்த அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் படந்தாலுமூடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story