'நீட்' தேர்வு பயிற்சி மையத்தில் 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவி சிகிச்சை பலனின்றி சாவு
நீட் தேர்வு பயிற்சி மையத்தில் 3-வது மாடியில் இருந்து குதித்து படுகாயம் அடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார். காதல் விவகாரத்தில் தந்தை திட்டியதால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரிய வந்துள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). இவருடைய மகள் ஆனந்தி (18). இவர் படியூரில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்தார். பின்னர் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை 4 மணி அளவில் மணிகண்டன், ஆனந்தி படிக்கும் 'நீட்' தேர்வு பயிற்சி மையத்துக்கு வந்து தனது மகளை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக காத்திருந்தார். இந்த பயிற்சி மையம் 2-வது மாடியில் செயல்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பு முடிந்து 3-வது மாடியில் உள்ள கழிவறைக்குச் செல்வதாக கூறிச்சென்ற ஆனந்தி திடீரென்று 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
மாணவி தற்கொலை
இதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் உயிருக்கு போராடிய தனது மகளை பார்த்து மணிகண்டன் கதறி துடித்தபடி மடியில் தூக்கி வைத்து அழுது புரண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் நள்ளிரவில் ஆனந்தி பரிதாபமாக இறந்தார். போலீஸ் விசாரணையில், காதல் விவகாரத்தில் தந்தை திட்டியதால் மாணவி மனம் உடைந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.