கண்களை கட்டிக்கொண்டு 1 மணி நேரம் ஆக்கி விளையாடிய மாணவன்
கண்களை கட்டிக்கொண்டு 1 மணி நேரம் மாணவன் ஆக்கி விளையாடி சாதனை படைத்தான்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள வெள்ளையாபுரத்தை சேர்ந்தவர் கண்ணன், சுகிதா தம்பதியின் மகன் தர்ஷன் (வயது 12). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். தர்ஷன் கடந்த ஒரு வருடமாக சிவகாசியில் உள்ள ஒரு அகடாமியில் சேர்ந்து ஆக்கி பயிற்சி பெற்று வருகிறார். பயிற்சியாளர் நாகராஜ் ஆலோசனையின் பேரில் கண்களை கட்டிக்கொண்டு ஆக்கி விளையாடும் பயிற்சியை மேற்கொண்டார். இந்தநிலையில் நோவா உலக சாதனை புத்தகம் மாணவன் தர்ஷனின் சாதனையை புத்தகத்தில் பதிவு செய்வதற்கான நிகழ்ச்சி நேற்று சிவகாசி கம்மவர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனை சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன் ராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் தனலட்சுமி காசி, சித்துராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் லீலாவதிசுப்புராஜ், பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா, ஆசிரியர்கள் சுலோச்சனா, கூடலிங்கம், ராம சாமி, விக்டர்ராஜ், முன்னாள் அறங்காவலர்குழு தலைவர் பலராமன், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.. மாணவன் தர்ஷன் கண்களை கட்டிக்கொண்டு 1 மணி நேரம் 1 நிமிடம் ஆக்கி விளையாடினார். இதனை நோவா உலக சாதனை புத்தகம் அமைப்பினர் சாதனையை பதிவு செய்து கொண்டு அதற்கான சான்றிதழ்களை வழங்கினர். இதுகுறித்து தர்ஷன் கூறியதாவது:- தற்போது நான் நிகழ்த்தி உள்ள இந்த சாதனையை விரைவில் நானே முறியடிப்பேன். இந்திய ஆக்கி அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பது தான் எனது லட்சியம். அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபடுவேன். எனது இந்த சாதனைக்கு எனது குடும்பத்தினர், நண்பர்கள், பயிற்சியாளர் பெரிதும் உதவியாக இருந்தனர். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக தர்ஷன் விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.