31 கிலோ மீட்டர் ஸ்கேட்டிங் செய்து கொண்டே சிலம்பம் சுற்றிய மாணவன்


31 கிலோ மீட்டர் ஸ்கேட்டிங் செய்து கொண்டே சிலம்பம் சுற்றிய மாணவன்
x

குடியாத்தத்தில் 31 கிலோமீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து கொண்டே சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மாணவருக்கு நோபல் உலக சாதனை நிறுவனம் சான்றிதழ் வழங்கியது.

வேலூர்

ஸ்கேட்டிங் செய்து கொண்டே சிலம்பம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை ஜவஹர்லால் தெருவை சேர்ந்த கார்த்தி-நிர்மலா தம்பதியரின் மகன் கே.நிதின் (வயது12). குடியாத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் சிறுவயது முதலே சிலம்பம், ஸ்கேட்டிங் விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டு மாநில மற்றும் இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் உலக சாதனைக்காக ஸ்கேட்டிங் செய்து கொண்டே, ஒரு கையில் தேசிய கொடியை ஏந்திக்கொண்டு, மறு கையில் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியை நேற்று காலை நடத்தினார். இதற்காக பேரணாம்பட்டை அடுத்த பத்தலப்பல்லி பகுதியில் இருந்து குடியாத்தம் நோக்கி மாணவர் நிதின் ஸ்கேட்டிங் செய்துகொண்டே ஒரு கையில் சிலம்பம் சுற்றிக்கொண்டும், மறு கையில் தேசியக்கொடி ஏந்தியவாறும் வந்தார்.

சான்றிதழ்

அப்போது இளைய சமுதாயம் போதை மற்றும் மது, செல்போன் பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளதால் அதிலிருந்து விடுபட விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஸ்கேட்டிங் செய்வதாக தெரிவித்தார். தொடர்ந்து குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை வரை வந்து மீண்டும் கொல்லாபுரம் சென்று மீண்டும் குடியாத்தம் திரும்பினார். மொத்தம் 31 கிலோமீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம் 45 நிமிடத்தில் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை நோபல் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்தது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு மற்றும் நோபல் உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ. அமலுவிஜயன், குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு ஸ்கேட்டிங்கில் உலகசாதனை புரிந்த மாணவன் நிதினை பாராட்டினர். நோபல் உலக சாதனை நிறுவனத்தினர் சான்றிதழை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜூடோராமு, பவர்பாண்டியன், கோல்டன்கோபால், சிலம்பம் அகாடமி தலைவர்கள் நாராயணன், சேகர், கல்வியாளர் ஜி.ரமேஷ்குமார், பிலால்நத்தர் உள்ளிட்டோர் உலகசாதனை படைத்த சிறுவனை பாராட்டி வாழ்த்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story