குடும்ப வறுமையால் வழிப்பறி திருடனாக மாறிய மாணவர் கைது


தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே குடும்ப வறுமையால் வழிப்பறி திருடனாக மாறிய மாணவரை போலீசார் கைது செய்தனர். இவர் பெயிண்டருடன் சேர்ந்து மூதாட்டியிடம் நகை பறித்தது அம்பலமானது.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே குடும்ப வறுமையால் வழிப்பறி திருடனாக மாறிய மாணவரை போலீசார் கைது செய்தனர். இவர் பெயிண்டருடன் சேர்ந்து மூதாட்டியிடம் நகை பறித்தது அம்பலமானது.

மூதாட்டி

கருங்கல் அருகே உள்ள ஆயிரம்பிலாவிளையை சேர்ந்தவர் தங்கப்பன். இவருடைய மனைவி பால்நேசம் (வயது 70). இவர்களுடைய மகள்கள் 2 பேருக்கும் திருமணமாகி விட்டது.

பால்நேசம், தன்னுடைய கணவர் இறந்ததை தொடர்ந்து திக்கணங்கோடு பெத்தேல்புரத்தில் உள்ள தனது மூத்தமகள் சரோஜாவின் வீட்டில் வசித்து வருகிறார்.

3 பவுன் நகை பறிப்பு

நேற்று முன்தினம் மதியம் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக ஒருமாவிளை பஸ் நிறுத்தத்தில் பால்நேசம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பால்நேசத்திடம் நைசாக பேச்சுக் கொடுத்தனர்.

அப்போது திடீரென பால்நேசத்தின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்த னர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்... திருடன் என அலறினார். உடனே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

வாகன சோதனை

இதுகுறித்து பால்நேசம் தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேரின் உருவமும், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணும் தெளிவாக பதிவாகி இருந்தது. உடனே போலீசார் அந்த ஆசாமிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நேற்று காலையில் தக்கலை இன்ஸ்பெக்டர் நெப்போலியன், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், பாலகுரு ஆகியோர் பள்ளியாடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மாணவர் சிக்கினார்

அப்போது சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த மோட்டார் சைக்கிளின் பதிவெண்ணும், மூதாட்டி நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணும் ஒன்றாக இருந்தது. உடனே 2 பேரையும் பிடித்து சோதனை செய்தனர். இதில் பால்நேசத்திடம் பறித்த 3 பவுன் தங்கச்சங்கிலி இருந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிள், நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிடிபட்டவர்கள் விளவங்கோடு ஆலுவிளையை சேர்ந்த பெயிண்டர் பிரகாஷ் (43) என்பதும், அருமனை அருகே உள்ள மாத்தூர்கோணம் பகுதியை சேர்ந்த ஜினோ (22) என்பதும் தெரியவந்தது. மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஜினோ டிப்ளமோ படித்து வருகிறார். பிரகாஷ் வேலைக்காக மார்த்தாண்டம் சென்ற போது ஜினோவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிறையில் அடைப்பு

அப்போது ஜினோவின் குடும்ப நிலையை பற்றி பிரகாஷ் கேட்டுள்ளார். ஜினோவின் தந்தை கொரோனா பாதிப்பு சமயத்தில் இறந்து விட்டதாகவும், தாய் கூலி வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு சம்பாதித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் மாணவனின் வறுமையை பயன்படுத்திய பிரகாஷ், அவரை திருட்டு தொழிலில் ஈடுபட செய்ய மூளை சலவை செய்து மாணவனை சம்மதிக்க வைத்தார்.

அதன்படி முதன்முறையாக மாணவன், மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டு வழிப்பறி திருடனாக மாறினார். ஆனால் முதல் திருட்டிலேயே அவர் போலீசாரிடம் மாட்டிக் கொண்டது விசாரணையில் அம்பலமானது. பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்து பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story