ஓவிய கலைஞராக வர வேண்டிய மாணவன் தீயில் கருகி விட்டான்
திருவட்டார் அருகே 2 மகன்களை தீவைத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்த சம்பவம் குமரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் மூத்த மகன் ஓவியராக, விஞ்ஞானியாக வரவேண்டியவன் தீயில் கருகிவிட்டான் என ஓவிய ஆசிரியரின் உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
திருவட்டார்:
திருவட்டார் அருகே 2 மகன்களை தீவைத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்த சம்பவம் குமரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் மூத்த மகன் ஓவியராக, விஞ்ஞானியாக வரவேண்டியவன் தீயில் கருகிவிட்டான் என ஓவிய ஆசிரியரின் உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
தீ வைத்தார்
திருவட்டார் அருகே வடக்கநாடு புத்தன்வீட்டுவிளையை சேர்ந்தவர் ஏசுதாஸ்(வயது52), கட்டிட சென்டிரிங் தொழிலாளி. இவருடைய மனைவி ஷீபா(41). இவர்களுக்கு கெவின்(15), கிஷான்(7) என 2 மகன்கள் இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஷீபா குடும்ப பிரச்சினையில் 2 மகன்களை மண்எண்ெணய் ஊற்றி தீவைத்து எரித்துக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த ஷீபாவின் கணவர் ஏசுதாசிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ஏசுதாஸ் போலீசாரிடம் கூறியதாவது:-
மகன்களை நினைத்து மனமுடைந்தார்
எனது சொந்த ஊர் வேர்க்கிளம்பி அருகே உள்ள உடையார்விளை ஆகும். ஷீபாவை திருமணம் செய்து எங்களுக்கு கெவின், கிஷான் என 2 மகன்கள் இருந்தனர். மகன்கள் 2 பேரும் வாதநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. பிள்ளைகளின் ஆரோக்கியம் இப்படி ஆகிவிட்டதே என ஷீபா மிகுந்த வேதனைப்பட்டார். நான் ஷீபாவை சமாதானம் செய்வேன். ஆனாலும் அடிக்கடி ஷீபா மகன்களின் நிலையை கூறி அழுது புலம்புவார்.
அதன்படி கடந்த 28-ந்தேதி காலையில் திடீரென ஷீபா என்னிடம் தகராறு செய்தார். என் மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து முயன்றார். நான் உடனே வீட்டை விட்டு வெளியேறி வேலைக்குச்சென்று விட்டேன். மாலையில் வீட்டுக்கு தேவையான சாமான் வாங்கி வந்தேன். அப்போதும் தகராறு செய்து என்னை வீட்டுக்குள் விடவில்லை. என்னை வெளியே விட்டு மகன்களுடன் கதவை பூட்டிக்கொண்டார். நான் இது அடிக்கடி நடக்கும் என்பதால் வேதனையுடன் வேர்க்கிளம்பியில் கடை வராண்டாவில் தூங்கினேன்.
அம்மா தீவைத்ததாக...
மறுநாள் அதிகாலையில் வீட்டுக்கு வந்தபோது வீட்டுக்குள் இருந்து புகை வருவதை கண்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தேன். அப்போது எனது மூத்த மகன், அம்மா தீவைத்ததாக சொல்லி தீயில் எரிந்த காயத்துடன் கதறினான்.
உடனே ஊரார் உதவியுடன் அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். ஆனால், செல்லும் வழியில் இளைய மகனும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி மனைவியும், மூத்த மகனும் அடுத்தடுத்து இறந்தனர் என ஏசுதாஸ் தெரிவித்தாக போலீசார் தெரிவித்தனர்.
விஞ்ஞானியாக வேண்டும்
ஏசுதாசின் மூத்த மகன் கெவின் முளகுமூட்டில் ஒரு ஓவியப்பள்ளியில் படித்து வந்துள்ளார். கெவின் இறந்ததை கேட்டு ஓவியப்பள்ளி ஆசிரியர் அமர வர்மா மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அவர் கூறுகையில், கெவின் 7-ம் வகுப்பு படிக்கும்போது என்னிடம் ஓவியம் படிக்க வந்தான். அவனுக்கு பேசுவதில், கால்களில் லேசான குறைபாடு இருந்தது. அதைப்பற்றி அவன் வருத்தப்பட்டதே இல்லை. ஓவியங்களில் உள்ள நுணுக்கத்தை உடனே புரிந்து கொண்டு விரைவாக அதை அப்படியே வரையும் திறைமையுள்ளவனாக இருந்தான். அதை அவன் வரைந்த படங்களை பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசின் கலைப்பண்பாட்டுத்துறை சார்பில் நடந்த போட்டியில் முதல்பரிசு பெற்றான். அவனிடம் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டபோது விஞ்ஞானியாவேன் என்றான்.
நடிகர் பாராட்டினார்
சென்னையில் நடந்த கண்காட்சியில் இவன் வரைந்த ஓவியம் கண்காட்சியில் வைக்கப்பட்டது. அந்த ஓவியத்தை பார்த்த நடிகரும் ஓவியருமான பொன்வண்ணன் உள்பட பலரும் பாராட்டினர். ஆனால், கடந்த சில மாதங்களாக அவன் ஓவியப்பயிற்சிக்கு வரவில்லை. அவன் 10-ம் வகுப்பு முடிந்த பிறகு மீண்டும் ஓவியம் படிக்க வருவான் என அவனது தாயார் கூறினார். அவன் வீட்டில் உள்ள பிரச்சினைகளை எங்களிடம் கூறியதே இல்லை. எதிர்காலத்தில் ஓவியராக, விஞ்ஞானியாக வரவேண்டிய ஒருவனை தளிரிலேயே தீயில் கருகியது வேதனையாக உள்ளது என்றார்.