ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உயிருடன் மீட்பு


ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உயிருடன் மீட்பு
x

குளிக்கச் சென்றபோது பாமணி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உயிருடன் மீட்கப்பட்டான்.

திருவாரூர்

மன்னார்குடி 33-வது வார்டு மீனாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் மாதவன் (வயது 16). அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறான். இவன், நேற்று காலை அப்பகுதியில் உள்ள பாமணி ஆற்றுக்கு குளிக்க சென்றான். அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் மாதவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டான். நீண்ட நேரமாகியும் மாதவன் வீடு திரும்பாததால் உறவினர் காளிதாஸ் என்பவர் ஆற்று பகுதிக்கு சென்று தேடினார். அங்கு மாதவனின் சைக்கிள் மட்டும் நின்று கொண்டிருந்தது. இதனால், பதற்றம் அடைந்த அவர் மற்ற உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த 33-வது வார்டு நகர்மன்ற கவுன்சிலர் திருச்செல்வி அமிர்தராஜ் தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உயிருடன் மீட்பு

தகவலின்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், அறிவுடைநம்பி பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களும் ஆற்றில் இறங்கி மாதவனை தேடினர். சுமார் 1 மணி நேர தேடுதலுக்கு பின் சிறிது தூரத்தில் சுழலில் சிக்கி தத்தளித்து கொண்டிருந்த மாணவன் மாதவனை உயிருடன் மீட்டனர். பின்னர், சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு மாதவனை கொண்டு சென்றனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினான். உடனடியாக விரைந்து வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் அப்பகுதி கவுன்சிலர் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story