பள்ளிக்கு சென்ற மாணவன் குட்டையில் மூழ்கி பலி
ஜோலார்பேட்டை அருகே பள்ளிக்கு சென்ற மாணவன், நண்பனுடன் குட்டையில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பலியானான்.
பள்ளிக்கு சென்றான்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள அம்மையப்பன் நகர் வி.எம்.வட்டத்தை சேர்ந்தவர் சஙகர் கூலி தொழிலாளி. இவரது மகன் மாதேஸ்வரன் (வயது 15). தாமலேரிமுத்துார் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். இந்தநிலையில் அரையாண்டு விடுமுறை முடிந்து நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து சென்றான்.
ஆனால் மாதேஸ்வரன் பள்ளிக்கு செல்லாமல் வழியில் கட்டேரி பகுதியில் உள்ள ரெயில்வே துறைக்கு சொந்தமான குட்டையில் தனது நண்பருடன் குளிக்க சென்றுள்ளான். பள்ளி சீருடை, புத்தக பை ஆகியவற்றை கழற்றி வைத்து விட்டு குட்டையில் இறங்கியுள்ளான். அப்போது ஆழமான பகுதிக்கு சென்று, நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியிருக்கிறான்.
குட்டையில் மூழ்கி பலி
இதனால் கூச்சல் போடவே மாணவனின் நண்பர் அருகில் இருந்தவர்களை அழைத்து மாணவனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதித்த போது வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது.
இது குறித்து மாணவனின் தந்தை சங்கர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்ற பள்ளி மாணவன் குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.