நகராட்சி நிர்வாகத்துறை வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் கேஎன்நேரு தலைமையில் நடைபெற்றது
நகராட்சி நிர்வாகத்துறை வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் கேஎன்நேரு தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகராட்சி நிர்வாகத்துறை வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ்மீனா, மாவட்ட கலெக்டர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்க
கூட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய நகராட்சிகள் மற்றும் வளவனூர், விக்கிரவாண்டி, செஞ்சி, திருவெண்ணெய்நல்லூர், அரகண்டநல்லூர் உள்ளிட்ட பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் நேரு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் நிலவரம், அப்பணிகள் எப்போது முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்ததோடு மக்களுக்கான அடிப்படை வளர்ச்சிப்பணிகளை விரைந்து முடிக்கும்படி உத்தரவிட்டார்.
மேலும் விழுப்புரம் நகராட்சியில் குடிநீர் திட்டங்கள், விரிவுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், சாலைப்பணிகள், தூய்மை இந்தியா திட்டப்பணிகள், திண்டிவனம் நகராட்சியில் புதிய பஸ் நிலைய பணிகள், வளர்ச்சிப்பணிகள் குறித்தும், அதேபோல் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின்கீழ் எம்.எல்.ஏ.க்கள் அளித்த 10 கோரிக்கைகளில் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், அத்திட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் திட்டமதிப்பீடு தயாரிக்கவும் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் நேரு அறிவுறுத்தினார். அதேபோல் பேரூராட்சிகளில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, நகராட்சி, பேரூராட்சிகளில் என்னென்ன திட்டங்கள் தேவை என்று உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் நேரு, படிப்படியாக அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.
கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் பொன்னையா, பேரூராட்சி துறை ஆணையர் செல்வராஜ், குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மணிக்கண்ணன், சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.