மாற்றுத்திறனாளி மாணவனை பள்ளியில் சேர்த்து படிக்க உதவிய சப்-கலெக்டர்


மாற்றுத்திறனாளி மாணவனை பள்ளியில் சேர்த்து படிக்க உதவிய சப்-கலெக்டர்
x

தக்கலையில் பட்டா கேட்டு வந்த மாற்றுத்திறனாளி மாணவனை, சப்-கலெக்டர் கவுசிக் பள்ளியில் சேர்த்து படிக்க உதவினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தக்கலையில் பட்டா கேட்டு வந்த மாற்றுத்திறனாளி மாணவனை, சப்-கலெக்டர் கவுசிக் பள்ளியில் சேர்த்து படிக்க உதவினார்.

மாற்றுத்திறனாளி மாணவன்

தாழக்குடி அருகே உள்ள சந்தைவிளை பகுதியைச் சேர்ந்த மாணவன் பெபித் (வயது 18). இவர் சிறு வயதில் போலியோ நோய் தாக்குதால் கால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியானார். இதனால் இவருடைய தாய், தந்தை அவரை வெறுத்து ஒதுக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் 2 பேரும் இவரை கைவிட்டு விட்டனர். இதனால் மாணவன் பெபித் சந்தைவிளை பகுதியில் உள்ள பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.

பாட்டி அவரை 10-ம் வகுப்பு வரை படிக்க வைத்தார். கொரோனா காலத்தில் பெபித் 10-ம் வகுப்பு முடித்தார். அதன்பிறகு இவரை படிக்க வைக்க வசதி இல்லாத நிலை ஏற்பட்டது. மாற்றுத்திறனாளியாக இருந்ததால் அதுவும் படிப்புக்கு ஒரு தடையாக அமைந்து விட்டது. இதனால் பெபித் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

உதவி கலெக்டரிடம் மனு

இந்தநிலையில் பெபித்தின் தாயாருக்கு சொந்தமான இடம் நாகர்கோவிலை அடுத்து ஆளூர் ஆதிதிராவிடர் நல காலனியில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த இடத்துக்கு பட்டா கேட்டு நேற்று முன்தினம் தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் சப்- கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சப்-கலெக்டர் கவுசிக்கிடம், பெபித் பட்டா கேட்டு மனு கொடுத்தார்.

மாற்றுத்திறனாளியான பெபித் ஊன்றுகோலுடன் சென்றதைப் பார்த்த, சப்- கலெக்டர் கவுசிக்கு கருணை பிறந்தது. அவரது வாழ்க்கை விவரங்களை, சப்- கலெக்டர் கேட்டறிந்தார். அப்போது மேற்கண்ட விவரங்களை பெபித், அவரிடம் தெரிவித்தார். உடனே சப்-கலெக்டர் கவுசிக், படிக்க விருப்பமா? என்று கேட்டார். மாணவர் பெபித்தும் படிக்க உதவினால் படிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

பள்ளியில் சேர்ப்பு

இதையடுத்து அவரை தக்கலையில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் அவரை சேர்த்து, தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 சேர்க்கை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பத்மநாபபுரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி தாசில்தார் கோலப்பன் மற்றும் அதிகாரிகள் மாணவன் பெபித்துக்கு நோட்டு, புத்தகங்கள், புத்தகப்பை, எழுது பொருட்கள் அனைத்தும் வாங்கி கொடுத்து தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்க ஏற்பாடு செய்தனர். மாணவன் பெபித்தை வளர்த்த பாட்டியும் நேரில் வந்து அவரை பள்ளியில் சேர்த்துவிட்டுச் சென்றார்.

இந்தநிலையில் நேற்று அந்த பள்ளிக்குச் சென்று மாணவர் பெபித்தின் கற்றல் திறனை அறிவதற்காக நேரில் சென்றார். அப்போது பெபித் எடுத்துள்ள வரலாறு பாடப்பிரிவு மாடியில் இருந்தது. மாற்றுத்திறனாளியான அவரால் மாடிக்குச் செல்வது கடினம் என்பதால் பிளஸ்-1 வரலாறு பாடப்பிரிவை கீழ்தளத்துக்கு மாற்ற சப்- கலெக்டர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இந்த பாடப்பிரிவு கீழ்தளத்துக்கு மாற்றப்பட்டது. மாணவனிடமும், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடமும் படிப்பு குறித்தும், கற்றல் திறன் குறித்தும் சப்- கலெக்டர் கவுசிக் கேட்டறிந்தார்.

பட்டா கேட்டு வந்த மாற்றுத்திறனாளி மாணவன், பள்ளிப்படிப்பை இடையில் நிறுத்தியதைக் கண்டு உடனடியாக படிக்க ஏற்பாடு செய்த சப்-கலெக்டர் கவுசிக்கின் இந்த செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.


Next Story