சாலையில் திடீரென ஏற்பட்ட விரிசல்


சாலையில் திடீரென ஏற்பட்ட விரிசல்
x

கொள்ளிடம் அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.14 கோடியில் அமைக்கப்பட்ட சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.14 கோடியில் அமைக்கப்பட்ட சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

ரூ.14 கோடியில் தார்ச்சாலை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பனங்காட்டங்குடி கிராமத்தில் இருந்து மாதிரவேளூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.14 கோடி மதிப்பீட்டில் தார்ச்சாலையாக மேம்படுத்தப்பட்டது.

இந்த சாலையின் வழியாக சீர்காழியில் இருந்து பனங்காட்டங்குடி, வடரங்கம், பாலூரான்படுகை, வாடி உள்ளிட்ட கிராமங்கள் வழியே மாதிரவேளூருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிதாக அரசு பஸ் இயக்கப்பட்டது.மேலும், இந்த சாலை வழியே கொள்ளிடம், சிதம்பரம், சீர்காழி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வாகனங்கள் மூலமாக சென்று வருகின்றனர்.

100 மீட்டர் தூரத்துக்கு விரிசல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த சாலையில் அரசடிபாலம் அருகே சாலையின் நடுவில் திடீரென 100 மீட்டர் தூரத்துக்கு விரிசல் ஏற்பட்டது. இதேபோல் இந்த சாலையில் வாடி கிராமத்திலும் 50 மீட்டர் தூரத்துக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையின் நடுவே திடீரென விரிசல் ஏற்பட்டதால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சாலையில் விரிசல் ஏற்பட்டதால் அந்த வழியாக சென்ற அரசு பஸ் நேற்று நிறுத்தப்பட்டது.

சீரமைக்க வேண்டும்

மேலும் வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்வதற்காக சாலையில் விரிசல் ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story