கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குளறுபடி நடப்பதாக கூறி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்ணா போராட்டம்
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிப்பதற்காக பண்ருட்டி தாலுகா அண்ணாகிராம் ஒன்றியத்தை சேர்ந்த அவியனூர் கிராம பொதுமக்கள் வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென மனுக்கள் பதியும் இடத்திற்கு அருகில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பார்த்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் கூறுகையில், அவியனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தில் குளறுபடி நடக்கிறது. அதாவது, தகுதி உள்ள எங்களுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்காமல், அனைத்து வசதிகளும் இருப்பவர்களுக்கு 100 நாட்கள் வேலை வழங்குகிறார்கள்.
வேலை வழங்க வேண்டும்
இது பற்றி பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும். ஆனால் அவர்கள், வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை வழங்குகிறார்கள். ஆகவே தகுதி உள்ள எங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றனர்.
இதை கேட்ட போலீசார், இது பற்றி குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். அதையடுத்து அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரனிடம் மனு அளித்து விட்டு சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.