கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைத்திருந்தவர் வீட்டில் திடீர் தீ


கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைத்திருந்தவர் வீட்டில் திடீர் தீ
x

கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைத்திருந்தவர் வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

திருச்சி

மலைக்கோட்டை:

திருச்சி மேல சிந்தாமணி நடுத்தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 37). இவர் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை சந்தோஷ் தனது தாய் ராஜேஸ்வரியுடன் வீட்டில் இருந்தபோது கியாஸ் சிலிண்டர் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துரிதமாக செயல்பட்டு தீயை உடனடியாக அணைத்தனர்.

அப்போது வீட்டில் பூட்டியிருந்த ஒரு அறையில் இருந்து புகை வந்ததால், தீயணைப்பு வீரர்கள் அந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக மற்றும் வணிக கியாஸ் சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக சிலிண்டர்களை அங்கிருந்து தீயணைப்பு துறையினர் அப்புறப்படுத்தினர். மேலும் அந்த பகுதியில் உடனடியாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் கியாஸ் ஏஜென்சியில் வேலை பார்த்து வந்த சந்தோஷ், அந்த கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.

இதனையடுத்து சந்தோஷை கைது செய்த போலீசார் அவரை உணவு பொருட்கள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் சந்தோஷ், கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து ஆட்டோ, கார்களுக்கு கியாஸ் நிரப்பி கொடுத்து வந்துள்ளதும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story