பழனி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திடீர் தீ; குவிந்து கிடந்த குப்பைகள் பற்றி எரிந்தது
பழனி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்து கிடந்த குப்பைகள் தீப்பற்றி எரிந்தன.
பழனியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சுற்றுவட்டார பொதுமக்களும், பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி அரசு ஆஸ்பத்திரி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தின் பல்வேறு இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.
இந்தநிலையில் நேற்று ஆஸ்பத்திரி மேற்கு நுழைவு வாயில் அருகே குவிந்து கிடந்த குப்பைகள் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக்கண்ட நோயாளிகள் உடனடியாக ஆஸ்பத்திரி பணியாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அருகில் உள்ள பிற குப்பைகளுக்கும் தீ பரவியது. அதன்பின்பு பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து குப்பைகளில் எரிந்த தீயை அணைத்தனர். நல்லவேளையாக தீ விரைந்து அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஆஸ்பத்திரி வளாகத்தில் முறையாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதாகவும், இதனால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் நோயாளிகள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே ஆஸ்பத்திரி வளாகத்தில் கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.