அம்மா உணவகத்தில் ஊழியர்கள் திடீர் போராட்டம்


அம்மா உணவகத்தில் ஊழியர்கள் திடீர் போராட்டம்
x

ஈரோடு அகில்மேடு வீதியில் உள்ள அம்மா உணவகத்தில் ஊழியர்களின் திடீர் போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு 2 மணி நேரம் உணவு வழங்கப்படவில்லை.

ஈரோடு

ஈரோடு அகில்மேடு வீதியில் உள்ள அம்மா உணவகத்தில் ஊழியர்களின் திடீர் போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு 2 மணி நேரம் உணவு வழங்கப்படவில்லை.

திடீர் போராட்டம்

ஈரோடு அகில்மேடு வீதியில் உள்ள சின்ன மார்க்கெட் வளாகத்தில் அம்மா உணவகம் கடந்த 11 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சுய உதவி குழுவை சேர்ந்த 11 பெண் ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். டோக்கன் வழங்குதல், சமையல் செய்வது, உணவு பரிமாறுதல் என அனைத்து வேலைகளையும் பகிர்ந்து கொண்டு இவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

கடந்த மாதம் இந்த உணவகத்தில் மேலும் 2 பெண் ஊழியர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தபட்டனர். அவர்கள் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் டோக்கன் மட்டுமே வழங்கி வருவதாகவும், மற்ற வேலைகளை செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மற்ற ஊழியர்கள் அவர்களிடம் நீங்களும் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும், டோக்கன் போடும் வேலை மட்டும் செய்யக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. எனினும் அந்த 2 பெண் ஊழியர்களும் டோக்கன் வழங்கும் வேலை மட்டும் செய்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

2 மணி நேரம் தாமதம்

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் 12 பேரும் அம்மா உணவகத்துக்கு வேலைக்கு வந்தனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் டோக்கன் வழங்கிய 2 பெண்களை கண்டித்து மற்ற ஊழியர்கள், அம்மா உணவகத்தில் இருந்து வெளிநடப்பு ெசய்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அங்கு வந்த பொதுமக்களுக்கு உணவு வழங்கவில்லை. இதனால் காலை உணவு சாப்பிட வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சுகாதார ஆய்வாளர் மணிவேல் மற்றும் அதிகாரிகள் அம்மா உணவகத்துக்கு விரைந்து வந்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், 'இந்த 2 ஊழியர்களும் மற்றவர்கள் போல் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும்' என்று கூறினர். அதற்கு அதிகாரிகள் முதலில் பொதுமக்களுக்கு உணவை பரிமாறுங்கள், அதன் பின்னர் உங்கள் பிரச்சினை குறித்து பேசி தீர்த்துக்கொள்ளலாம்' என்றனர். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கினர். இந்த போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பின்னர் பொதுமக்களுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது.


Related Tags :
Next Story