மக்கள் நலப்பணியாளர்களுக்கு விதித்த நிபந்தனைகளை ரத்து செய்யக்கோரி வழக்கு
மக்கள் நலப்பணியாளர்களுக்கு விதித்த நிபந்தனைகளை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
மதுரை மேலூரை சேர்ந்த ரவி, தேனியை சேர்ந்த மணிவேலன், சிவகங்கையை சேர்ந்த செல்வம் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இவர்கள் வேலை உறுதித்திட்ட ஒருங்கிணைப்பாளராக பணி அமர்த்தப்படுவர் என்றும், இவர்களுக்கான மதிப்பூதியம் ரூ.7,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் விதிமுறைகளுக்கு உட்பட்டு மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்கப்படுகிறது.
கடந்த 2011-ம் ஆண்டில் பணி இழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டத்தின்கீழ் ஒருங்கிணைப்பாளர் பணியில் சேர சம்மதக்கடிதத்தில் கையெழுத்து போட வேண்டும்.
அந்த கடிதத்தில், அரசு விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்படுகிறேன். ஏற்கனவே மக்கள் நலப்பணியாளராக பணிபுரிந்ததற்கான முன்னுரிமை, பணி தொடர்ச்சி மற்றும் பணப்பலன்களை கேட்க மாட்டேன் என உறுதியளிக்கிறேன் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது ஏற்புடையது அல்ல. இவ்வாறு நிபந்தனையுடன் சம்மத கடிதம் கேட்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ராஜாகார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.
விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை செயலாளர், இயக்குனர், மதுரை, தேனி, சிவகங்கை மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.