கரும்பு உற்பத்தியில் மிகை நிலையை ஏற்படுத்த வேண்டும்


கரும்பு உற்பத்தியில் மிகை நிலையை ஏற்படுத்த வேண்டும்
x

கரும்பு உற்பத்தியில் மிகை நிலையை ஏற்படுத்த வேண்டும்

தஞ்சாவூர்

கரும்பு உற்பத்தியில் மிகை நிலையை ஏற்படுத்தினால் விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் உள்ள காலதாமதத்தை குறைக்கலாம் என்று தமிழ்நாடு சர்க்கரை கழக மேலாண் இயக்குனர் விஜயராஜ்குமார் கூறினார்.

பேரவை கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சர்க்கரை கழகம் சார்பில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையின் 47-வது பேரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு சர்க்கரை கழக தலைவரும், மேலாண் இயக்குனருமான விஜயராஜ்குமார் தலைமை தாங்கினார்.

கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி செந்தில்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மேலாண் இயக்குனர் விஜயராஜ்குமார் பேசியதாவது:-

லாபகரமாக இல்லை

பொதுத்துறை, கூட்டுறவுத்துறை சர்க்கரை ஆலைகளில் இரு ஆலைகளை தவிர, மற்ற ஆலைகள் லாபகரமாக இல்லை. இவற்றின் வரவு, செலவுகளைப் பார்த்தால் நஷ்டத்தில் இயங்கக்கூடிய ஆலைகளாகத்தான் உள்ளன.

பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை நஷ்டத்தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரவைப் பருவத்தில் சர்க்கரை உற்பத்தியில் எதிர்பார்ப்பு, உற்பத்தி செய்யப்படவுள்ள அளவைக் கூறி, அதில் 80 முதல் 85 சதவீதம் வரை கூட்டுறவு வங்கிகளில் கடனாகப் பெறுகிறோம்.

பட்டுவாடா செய்வதில் காலதாமதம்

இந்தப் பணம் கரும்புக்கான தொகை மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் ஏற்படக்கூடிய செலவினங்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆலையை 3 மாதங்களுக்கு பிறகு தொடர்ச்சியாக இயக்குவதற்கு நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. அதை அரசிடமிருந்து முன் பணமாகவோ, கடனாகவோ பெறுகிறோம். இதனால்தான், விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் கால தாமதம் ஏற்படுகிறது.இந்த கால தாமதத்தைக் குறைக்க வேண்டுமானால், நாமே கரும்பு உற்பத்தியில் மிகை நிலையை ஏற்படுத்த வேண்டும். ஆலையின் அரவைத்திறனை முழுமையாகப் பயன்படுத்தினால்தான் பாதகங்களை உடைத்து, சாதகமான நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.

நிதி சிக்கலுக்கு தீர்வு

குருங்குளம் சர்க்கரை ஆலையிலும், பெரம்பலூர் சர்க்கரை ஆலையிலும் ஏறக்குறைய ரூ.100 கோடி இழப்பாக இருந்த நிலையில், அதில் நிகழாண்டு ரூ.10 முதல் 12 கோடி வரை குறைக்கப்படும். இதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல, குருங்குளம் ஆலையில் நிலவும் நிதி சிக்கலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.கரும்பு விலையில் டன்னுக்கு ரூ.195 ஊக்கத்தொகையாக டிசம்பர் 7-ந் தேதி முதல் அரசு கொடுக்கிறது. கூட்டுறவு, அரசுத்துறை ஆலைகளில் இத்தொகை 15 நாட்களுக்குள் 99.99 சதவீதம் வழங்கப்பட்டு விட்டது. குருங்குளம் சர்க்கரை ஆலையில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதை விரைவாக முடிக்க துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். வெட்டுக் கூலி பிரச்சினைக்கு எந்திரமயம் மூலமே தீர்வு பெற முடியும்.

அரவை திறன்

குருங்குளம் சர்க்கரை ஆலையில் ஒரு நாளைக்கு அரவைத்திறன் 2.1 டன்னாக உள்ளது. சர்க்கரை 100 சதவீதம் அரைவை செய்ய வேண்டுமானால் 4.30 லட்சம் டன்னாவது அரைத்தால்தான் லாப, நஷ்டமின்றி இயக்கக்கூடிய நிலையை அடைய முடியும். அப்போதுதான் ஆலை அளவில் முடிவு எடுப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story