'கடைகள், வர்த்தக நிறுவனங்களில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும்'
கொடைக்கானல் மலைக்கிராமங்களில் செயல்படும் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என்று கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கலெக்டர் பூங்கொடி உத்தரவிட்டார்.
கண்காணிப்புக்குழு கூட்டம்
பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத பசுமை கொடைக்கானலை உருவாக்குவது தொடர்பான கண்காணிப்புக்குழு கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கி பேசுகையில், பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத பசுமை கொடைக்கானலை உருவாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் தாலுகாவில் உள்ள அடுக்கம், பூம்பாறை, மன்னவனூர், பாச்சலூர் உள்ளிட்ட பல்வேறு மலைக்கிராமங்களில் பிளாஸ்டிக் தடுப்பு சோதனை சாவடிகள் உள்ளன. இந்த வழியாக செல்லும் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடம் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும்.
திடீர் ஆய்வு
பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை அடைத்து விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அவ்வப்போது கொடைக் கானல் பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகளில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மகளிர் திட்ட இயக்குனர் சரவணன், ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.