பாதுகாப்பு பணிக்காக முள்வேலி சுற்றப்பட்ட தடுப்புகள் அமைப்பு


பாதுகாப்பு பணிக்காக முள்வேலி சுற்றப்பட்ட தடுப்புகள் அமைப்பு
x

திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணிக்கான முள்வேலி சுற்றப்பட்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணிக்கான முள்வேலி சுற்றப்பட்ட தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சித்ரா பவுர்ணமி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்லவும் வருகை தருகின்றனர். இதில் கார்த்திகை தீப திருவிழாவின் போது மகாதீபம் ஏற்றப்படும் நாள் அன்றும், சித்ரா பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்காக வருவார்கள்.

இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வரை உள்ளது. இதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

முள்வேலி தடுப்புகள்

வழக்கமாக பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை நகரை ஒட்டி உள்ள கிரிவலம் செல்லும் பாதையை தவிர மற்ற பாதைகளில் காவல்துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்படும். அதன்படி சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அதிக மக்கள் கூடும் இடங்களில் முள்வேலி கம்பிகள் சுற்றியுள்ள தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

கிரிவலம் செல்லும் சமயத்தில் பக்தர்கள் எதிர்பாராத விதமாக ஒருவர் மீது ஒருவர் இடர்பாட்டில் சிக்கி அந்த முள்வேலி தடுப்புகள் மீது விழுந்தால் உயிர் சேதம் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முள்வேலி உள்ள தடுப்புகள் வழியாக சென்ற பொதுமக்கள் அவற்றைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். எனவே, இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் அந்த முள்வேலி சுற்றியுள்ள தடுப்புகளை அகற்றி மாற்றுத் தடுப்புகளை பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story