தையல் தொழிலாளி தற்கொலை
குடும்ப பிரச்சினை காரணமாக, தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பழனியை அடுத்த பாலாறு அணை பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 38). தையல் தொழிலாளி. கடந்த சில நாட்களாக இவர், குடும்ப பிரச்சினை காரணமாக மனம் உடைந்து காணப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த இவர், நேற்று முன்தினம் பழனி அண்ணாநகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.
இந்நிலையில் நேற்று இவர் தங்கியிருந்த அறையின் கதவு வெகுநேரம் பூட்டி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், பழனி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அறையை திறந்து பார்த்தனர்.
அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பூபாலன் பிணமாக கிடந்தார். இதனையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக பூபாலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.