சிகிச்சையில் இருந்த தையல் தொழிலாளிதூக்குப்போட்டு தற்கொலை
கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கும்பகோணம்;
கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தையல் தொழிலாளி
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கூந்தலூர் பகுதியை சேர்ந்தவர் மோசஸ். இவருடைய மகன் ஸ்டாலின்(வயது 32). இவர், திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் தையல் ெதாழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சொந்த ஊருக்கு வந்து தனது தாயுடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் ஸ்டாலின் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் ஸ்டாலினுக்கு காசநோய் இருப்பது தெரியவந்தது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதைத்தொடர்ந்து அவர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள காச நோய் பிரிவில் கடந்த 13-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஸ்டாலின் மிகுந்த மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.மேலும் தனது தாய் உடன் இருந்து கவனிப்பதால் அவருக்கும் காசநோய் தொற்றிக்கொள்ளுமோ என்கிற பயத்திலும் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஸ்டாலின் நேற்று அதிகாலை ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை பெற்று வந்த வார்ட்டின் அருகில் உள்ள அறையில் தனது தாயின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
நேற்று காலையில் பணிக்கு வந்த ஊழியர்கள் ஸ்டாலின் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ஸ்டாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.