நாமக்கல்லில் பெரியார் சிலை சேதம் தொடர்பாக அவதூறு கருத்து; தமிழ்புலிகள் கட்சி நிர்வாகி கைது


நாமக்கல்லில் பெரியார் சிலை சேதம் தொடர்பாக அவதூறு கருத்து; தமிழ்புலிகள் கட்சி நிர்வாகி கைது
x

நாமக்கல்லில் பெரியார் சிலை சேதம் அடைந்தது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக தமிழ்புலிகள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார்.

நாமக்கல்

பெரியார் சிலை சேதம்

நாமக்கல்லில் பிரதான சாலையில் பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரின் மார்பளவு கொண்ட சிலைகள் உள்ளன. இதில் கடந்த 24-ந் தேதி பெரியார் சிலை சேதம் அடைந்து இருப்பதை கண்டு அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி நரசிம்மன் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்த ்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, சரக்கு வாகனம் ஒன்று சிலையை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் மோதியதில் சிலை சேதமடைந்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து வாகனத்தின் டிரைவர் அருணை (வயது 32) கைது செய்த போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். இதற்கிடையே இரவோடு, இரவாக அ.தி.மு.க.வினர் அந்த சிலையை சீரமைத்து விட்டனர்.

தமிழ்புலிகள் கட்சி நிர்வாகி கைது

முன்னதாக அன்று இரவு சமூக வலைத்தளத்தில் பெரியார் சிலை சேதம் அடைந்தது தொடர்பாக அவதூறு கருத்துகளை நாமக்கல் அருகே உள்ள சின்னவேப்பனம் பகுதியை சேர்ந்த அக்பர் (45) என்பவர் பரப்பி இருப்பது தெரியவந்தது. அதில் இடம்பெற்று இருந்த வாசகம் இருதரப்பினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் இருந்ததால், அவரை நேற்று நாமக்கல் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அக்பர், தமிழ்புலிகள் கட்சியின் நாமக்கல் நகர துணை செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story