மணிப்பூரில் இருந்து குடும்பத்துடன் தப்பிவந்த தமிழர், நிதியுதவி கேட்டு மனு
மணிப்பூரில் இருந்து தப்பிவந்த தமிழர் ஒருவர், நிதியுதவி கேட்டு தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தார்.
சென்னை,
மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த மே மாதம் கடுமையான மோதல் நடைபெற்றது. அப்போது 2 பெண்கள் நிர்வாணமாக சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மணிப்பூரில் பல ஆண்டுகளாக வசித்து வந்த தமிழகத்தை சேர்ந்த ஜோசப் என்பவர், சென்னை தலைமைச் செயலகத்திற்கு தனது குடும்பத்தாருடன் நேற்று வந்தார். அங்குள்ள முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வீட்டை எரித்தனர்
நான் மணிப்பூர் மாநிலம் சுகுனு என்ற இடத்தில் வசித்துவந்தேன். அந்த மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து உள்ளேன். எனக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். நான் மனைவி, மருமகள், ஒரு பேரக்குழந்தை என 9 பேர் அங்கு வசித்து வந்தோம். தற்போது மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் எங்கள் வீட்டை தீ வைத்து எரித்து, எங்களை விரட்டி அடித்து விட்டனர்.
செங்குன்றத்தில்...
எங்களின் வீடு, உடமைகள், வாகனம் அனைத்தையும் விட்டுவிட்டு போகும் இடம் தெரியாமல் தலைமறைவாக காடுகளில் இருந்தோம். பின்னர் கவுகாத்தி சென்றோம். தமிழ் பேச தெரிந்ததால் அங்கிருந்து சென்னைக்கு வந்தோம். சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் அலைந்து திரிந்தபோது எங்களுக்கு உதவ நல்லுள்ளம் கொண்ட ஒருவர் முன்வந்தார். அவரது உதவியால் நாங்கள் தற்போது செங்குன்றத்தில் ஒரு சிறிய வீட்டில் தங்கி இருக்கிறோம்.
பிழைக்கவும், உண்ணவும் ஏதும் இன்றி பச்சிளம் குழந்தையுடன் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே இந்த கோரிக்கையை அரசு ஏற்று எங்களுக்கு தகுந்த உதவிகளை செய்ய தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.