டிராக்டர் மீது கார் மோதி ஆசிரியர் பலி
நத்தம் அருகே டிராக்டர் மீது கார் மோதியதில் ஆசிரியர் பலியானார். மனைவி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாமி தரிசனம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 65). ஓய்வு பெற்ற ஆசிரியர். அவருடைய மனைவி கெஜலட்சுமி. இந்த தம்பதிக்கு சிவனேசன் என்ற மகனும், சுமதி, சித்ரா என்ற மகள்களும் உள்ளனர்.
கந்தசாமி தனது மனைவி, மகன், மகள்களுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர்கள் 5 பேரும் நத்தம் வழியாக மீண்டும் திருச்செங்கோட்டுக்கு காரில் திரும்பி கொண்டிருந்தனர். காரை சிவனேசன் ஓட்டினார்.
ஆசிரியர் பலி
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, திண்டுக்கல் சாலையில் சேர்வீடு விலக்கு என்னுமிடத்தில் நேற்று மதியம் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக கார் பயங்கரமாக மோதியது.
இதில் டிராக்டர் மற்றும் கார் நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். மேலும் கெஜலட்சுமி, சிவனேசன், சுமதி, சித்ரா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
4 பேருக்கு சிகிச்சை
இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் கந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-------