சொந்தமாக ஆட்டோ வாங்கி மாணவர்களை அழைத்து வரும் ஆசிரியர்
மலை கிராம மாணவர்களின் சிரமத்தை போக்க அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் சொந்த செலவில் ஆட்ேடா வாங்கி மாணவர்களை அமரவைத்து அவரே பள்ளிக்கு இலவசமாக அழைத்து வருவது பாராட்டை பெற்று உள்ளது.
மலை கிராமம்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது அரவட்லா ஊராட்சி. இது மலைப்பகுதியில் தமிழக எல்லையில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் அரவட்லா, பாஸ்மார்பெண்டா, கொத்தூர் ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. தமிழக எல்லையான அரவட்லா கிராமம் பேரணாம்பட்டிலிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த 1962-ம் ஆண்டு முதல் 61 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
சொந்த செலவில் ஆட்டோ
இந்த நிலையில் பேரணாம்பட்டு ஒன்றியம் அரவட்லா மலைப்பகுதியில் உள்ள பாஸ்மார்பெண்டா தொடக்கப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் சிரமத்தை போக்கவும், அவர்களை பள்ளிக்கு வரவழைக்கவும் தன்னார்வலராக செயல்பட்டு சொந்தமாக ஆட்டோ வாங்கி பள்ளியில் நிறுத்தியுள்ளார்.
அந்த ஆட்டோவில் இலவசமாக மாணவர்களை அமரவைத்து அவரே பள்ளிக்கு ஓட்டி வருகிறார். அந்த ஆசிரியரின் பெயர் தினகரன் (வயது 39), கொத்தப்பல்லி கிராமத்தை சேர்ந்தவர். எம்.ஏ.பி.எட். படித்துள்ள தினகரன் பாஸ்மார்பெண்டா மலை கிராமத்திலுள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.
இவர் பணிபுரிந்து வரும் தொடக்க பள்ளியில் பாஸ்மார்பெண்டா, கொல்லைமேடு, தாமஏரி பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 100 பேர் படித்து வருகிறார்கள்
இதில் கொல்லைமேடு, தாமஏரி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பாஸ்மார்பெண்டா கிராமத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வனப்பகுதியில் கரடு முரடான பாதையில் நடந்து பள்ளிக்கு மிகுந்த சிரமத்துடன் வரும் நிலை உள்ளது.
பழங்குடியின மலைவாழ் மாணவர்களான இவர்கள் பள்ளிக்கு சரியாக வருவதில்லை. பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இதனால் அவர்களின் கல்விபாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதனை உணர்ந்த தலைமை ஆசிரியை திருமலைசெல்வி, ஆசிரியர் தினகரன் ஆகியோர் கொல்லைமேடு, தாமஏரி பகுதிகளுக்கு நடந்து சென்று பெற்றோர்களிடம் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும்படியும் படிக்க அனுப்பும்படியும் அறிவுரை வழங்கினர்.
தினமும் 3 தடவை
அதுவும் ஆசிரியர் தினகரன், அரசு பள்ளியில் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க தனது சொந்த செலவில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்திற்கு ஆட்டோ ஒன்றை வாங்கினார். ஆட்டோவின் முகப்பில் 'நம் பள்ளி நம் பெருமை', 'அரசு பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்' என்றும் ஊராட்சி ஒன்றிய ெதாடக்கப்பள்ளி, பாஸ்மார்பெண்டா எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தினகரன் பள்ளிகள் திறந்த ஜூன் 14-ந் தேதி முதல் தினமும் காலையில் கொத்தப்பல்லி கிராமத்திலிருந்து புறப்பட்டு காலை 8 மணிக்குள் பள்ளிக்கு மோட்டார்சைக்கிளில் வருகிறார். பின்னர் பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோவை எடுத்து கொண்டு 3 தடவை (டிரிப்) சென்று கொல்லைமேடு, தாம ஏரி பகுதிகளிலுள்ள தொடக்க பள்ளி மாணவர்கள் 40 பேரை காலை 8.50 மணிக்குள் பள்ளிக்கு அழைத்து வந்து விடுகிறார். அதுமட்டுமின்றி உயர்நிலை பள்ளி மாணவர்கள் தாமதமாக வந்தாலும் அவர்களையும் ஆட்டோவில் ஏற்றி வந்துவிடுகிறார். இதன் மூலம் மாணவர்களின் சிரமத்தை குறைப்பதுடன், அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதுடன், மலை கிராம மாணவர்களின் கல்வி தரம் உயரவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். மாலையில் மாணவர்கள் தாங்களாகவே வீடுகளுக்கு சென்று விடுகின்றனர்.
வருத்தமாக இருந்தது
இதுகுறித்து ஆசிரியர் தினகரனிடம் கேட்டபோது, கொல்லைமேடு, தாமஏரி பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு சரியாக வருவதில்லை. ஏன் பள்ளிக்கு வருவதில்லை என நான் கேட்டபோது, காலில் முள் குத்தி விட்டது, பூச்சி கடித்து விட்டது என கூறி காலை காண்பிப்பார்கள். இதனை பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது. எனவே, எனது சொந்த செலவில் ஆட்டோவை வாங்கி அதற்கு எனது செலவிலேயே டீசல் நிரப்பி மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று அழைத்து வருகிறேன் என்றார்.
இதுகுறித்து மலைவாழ் கிராம மக்கள் கூறுகையில், எங்கள் குழந்தைகளை ஆசிரியர் தினகரன் ஆட்டோவில் தினமும் வந்து அழைத்து செல்வதால் சந்தோஷமாக உள்ளது. அத்துடன் குழந்தைகள் புத்தகப்பைகளுடன் மகிழ்ச்சியுடன் ஆட்டோவில் ஏறி பள்ளிக்கு சென்று வருவது பெருமையாகவும் உள்ளது. ஆசிரியர் தினகரனை பாராட்டி வாழ்த்துகிறோம் என தெரிவித்தனர்.