பன்றி கடித்து வாலிபர் சாவு


பன்றி கடித்து வாலிபர் சாவு
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே பன்றி கடித்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

தென்காசி

தென்காசி அருகே பன்றி கடித்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

வாலிபர்

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி சேனை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மாடசாமி மகன் மணிச்சாமி (வயது 30). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை ஆய்க்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே இயற்கை உபாதைக்காக மணிச்சாமி சென்றுள்ளார்.

அப்போது திடீரென வந்த ஒரு பன்றி மணிச்சாமியின் இடுப்புக்கு கீழ்ப்பகுதியில் கடித்தது. இதை அறிந்த அவர் கூச்சல் போட்டார். அந்த பன்றி அவரது கால்களிலும் கடித்தது. இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

சாவு

பின்னர் அவர் ஆய்க்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தன்னை பன்றி கடித்து விட்டதாக கூறியுள்ளார். அவர்கள் சிறிது நேரம் அமரச் செய்துள்ளனர். அதிகமாக ரத்தம் வெளியேறியதால் சிறிது நேரத்திலேயே மணிச்சாமி பரிதாபமாக இறந்தார். பின்னர் அவரது உடலை பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து ஆய்க்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் வேல்கனி விசாரணை நடத்தி வருகிறார்.

வளர்ப்பு பன்றி

மணிச்சாமிக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு மாதத்தில் கை குழந்தையும் உள்ளனர்.

பன்றி கடித்து வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலில் காட்டுப்பன்றி கடித்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வளர்ப்பு பன்றி கடித்துள்ளதாக தெரிகிறது என போலீசார் தெரிவித்தனர்.



Next Story