செக்கானூரணி அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் சாவு
செக்கானூரணி அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்தார்
செக்கானூரணி
செக்கானூரணி அருகே பன்னியான் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் கணேசன்(வயது 25). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மந்தையில் உள்ள குடிநீர் தொட்டி அருகே உள்ள 100 அடி ஆழ பாழடைந்த கிணற்றின் மேல் பகுதியில் அமர்ந்திருந்தார். திடீரென்று அவர் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்க முயற்சித்தனர். பின்னர் தகவல் அறிந்து சோழவந்தான் தீயணைப்பு துறை அதிகாரி பசும்பொன் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே கிணற்றில் மூழ்கி கணேசன் இறந்து விட்டார். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு நேற்று காலை அவரது உடல் மீட்கப்பட்டது. இறந்த கணேசனின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, ஆபத்தான நிலையில் உள்ள அந்த கிணற்றை சுற்றி ஆ்ள் உயரத்திற்கு சுவர் எழுப்ப வேண்டும். குடிநீர் தொட்டி அருகே இருப்பதால் சிறுவர்-சிறுமிகள் அடிக்கடி அங்கு வருவதுண்டு. எனவே பாதுகாப்பு கருதி அந்த கிணற்றை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என்றனர்.