சாலை விபத்தில் வாலிபர் பலி
சாலை விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தரகம்பட்டி அருகே உள்ள தூளிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 37). இவர் போர்வெல் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று இரவு மயிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
தரகம்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்து நின்றது. இதனால் நிலைதடுமாறிய காளியப்பன் லாரியின் பின் பகுதியில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சிந்தாணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த காளியப்பனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.