மரத்தில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் வாலிபர் பலி
வந்தவாசி அருகே மரத்தில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வந்தவாசி
வந்தவாசி அருகே மரத்தில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மரத்தில் மோதியது
வந்தவாசியை அடுத்த தேசூர் குளக்கரைத்தெருவைச் சேர்ந்த சீராளன் என்பவரின் மகன் கண்ணபிரான் (வயது 21). இவரது உறவினர் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் முனிராஜ் (39).
இந்த நிலையில் முனிராஜின் மனைவி சென்னையில் இருந்து வந்தவாசிக்கு நேற்று இரவு வந்தார். அங்கிருந்து தேசூருக்கு பஸ் வசதி இல்லாததால் கண்ணபிரானும், முனராஜிம் அவரை அழைத்து வருவதற்காக காரில் வந்தவாசிக்கு சென்றனர். காரை கண்ணபிரான் ஓட்டினார்.
வந்தவாசியை அடுத்த சத்யா நகர் பகுதி அருகே இரவு சுமார் 11.30 அளவில் வரும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வாலிபர் பலி
இந்த விபத்தில் கண்ணபிரான், முனிராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் கண்ணபிரான் காரில் மாட்டிக் கொண்டு வெளியே எடுக்க முடியாத நிலையில் இருந்தார்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் வந்தவாசி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புத் வீரர்கள் விரைந்து சென்று அரை மணி நேரம் போராடி காரின் பக்கவாட்டு கதவை உடைத்து கண்ணபிரானை மீட்டனர்.
பின்னர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணபிரான் பரிதாபமாக இறந்தார். முனிராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.