கட்டிட பணியின்போது ஹாலோபிளாக் கல் விழுந்ததில் வாலிபர் பலி
கட்டிட பணியின்போது ஹாலோபிளாக் கல் விழுந்ததில் வாலிபர் பலியானார்.
கோவை
கோவை செல்வபுரம் முத்துசாமி காலனியை சேர்ந்தவர் இனாமுல் ஹசன் (வயது 27). இவர் தனியார் பயோடாய்லெட் விற்பனை நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 24-ந் தேதி இனாமுல் ஹசன் வேலை நிமித்தமாக பீளமேடு சென்றார்.
அங்கு காளப்பட்டி ரோட்டில் கட்டிட பணி நடைபெறும் பகுதியில் கட்டிட உரிமையாளர் அருண் என்பவரிடம் மார்க்கெட்டிங் சம்பந்தமாக பேசி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிட பணியின் போது கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் ஹாலோபிளாக் கல் ஒன்று அவர் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த இனாமுல் ஹசன் மயங்கி கீழே விழுந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு இருந்த பணியாளர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக இனாமுல் ஹசனின் தந்தை ஷாகீல் ஹமீத் பீளமேடு போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விதியை பின்பற்றாமல் கட்டிட பணியை மேற்கொண்ட கட்டிட ஒப்பந்ததாரர் ரஞ்சித் மற்றும் கட்டிட உரிமையாளர் அருண் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.