கிரேன் ஏறி இறங்கியதில் வாலிபர் பலி
சிவகாசியில் கிரேனுக்கு கீழே படுத்து தூங்கிய வாலிபர் மீது கிரேன் ஏறி, இறங்கியதால் அவர் பரிதாபமாக இறந்தார்.
சிவகாசி,
சிவகாசியில் கிரேனுக்கு கீழே படுத்து தூங்கிய வாலிபர் மீது கிரேன் ஏறி, இறங்கியதால் அவர் பரிதாபமாக இறந்தார்.
மோதியது
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் என்.ஆர்.நாதன் காலனியை சேர்ந்த முத்து மகன் அய்யப்பன் (வயது 29). இவர் கிடைத்த வேலைகளை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு செல்ல வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் அய்யப்பனை தேடினர். அப்போது அவர் சிவகாசி-திருத்தங்கல் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் அருகில் இறந்து கிடந்து தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொழிலாளி பலி
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அய்யப்பன் சம்பத்தன்று இரவு கிரேன் கீழே படுத்து தூங்கியதாகவும், அப்போது எதிர்பாராதவகையில் கிரேன் டிரைவர் காளிராஜன் என்பவர் கிரேனை பின்னோக்கி எடுத்த போது கீழே படுத்து இருந்த அய்யப்பன் மீது கிரேன் ஏறியதில் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அய்யப்பனின் தாய் செல்லத்தாய் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சிவகாசியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.