மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய தில் வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் வாலிபர் பலியானார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெருமத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் அருண் (வயது 27). இவர் அரணாரை பகுதியில் ஒருவரின் காருக்கு டிரைவராக கடந்த 2 மாதங்களாக வேலை பார்த்து வந்தார். அருணின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகவும், அவர் தனது தாய் காஞ்சனா தேவியுடன் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று காலையில் அருண் தனது தாயை பார்த்து வருவதாக கார் உரிமையாளரிடம் விடுமுறை கேட்டு, மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் வாங்கி கொண்டு வெளியே சென்றார். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் கோனோரிபாளையம் சந்திப்பு அருகே மோட்டார் சைக்கிளில் அருண் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த அருண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருணின் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி சென்றிருக்கலாம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.