விநாயகர் சிலையை கரைத்த வாலிபர் நீரில் மூழ்கி பலி
மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியில் விநாயகர் சிலையை கரைத்த வாலிபர் நீரில் மூழ்கி சாவு
மேச்சேரி:-
விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலம் கோரிமேடு பகுதியில் விநாயகர் சிலையை வைத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வழிபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் விநாயகர் சிலையை கரைக்க லாரியில் ஏற்றிக்கொண்டு மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியான கூனாண்டியூருக்கு வந்தனர். அங்கு விநாயகர் சிலையை லாரியில் இருந்து இறக்கி, மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் கரைத்தனர். இந்த சிலையை கரைக்க சேலம் கோரிமேட்டை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 22) என்பவர் தனது நண்பர்களுடன் சென்று இருந்தார். விநாயகர் சிலையை கரைத்து விட்டு குளிக்கும் போது சதீஷ்குமார் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி விட்டார். இதைபார்த்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு மேச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே சதீஷ்குமார் இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.