வேப்பூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் விபரீத முடிவு
வேப்பூர் அருகே குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராமநத்தம்,
வேப்பூர் அடுத்த செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கன் மகன் வெங்கடேசன் (வயது 28). இவருக்கும் ஏ.சித்தூர் கிராமத்தை சேர்ந்த தாய் மாமன் ரவி மகள் கிருத்திகா என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கிருத்திகா தனது தாய் மகேஸ்வரியுடன் பூதம்பூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வசித்து வந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசன், தனது மனைவி கிருத்திகாவை செல்போனில் தொடா்பு கொண்டு தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் வர மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வெங்கடேசன், ஏ.சித்தூரில் உள்ள தனது தாத்தா தங்கவேல் வீட்டுக்கு சென்று, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.