கம்பம் புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ் கண்டக்டர் சீருடையுடன் சுற்றித்திரிந்த வாலிபர்
கம்பம் புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ் கண்டக்டர் சீருடையுடன் சுற்றித்திரிந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஊருகளுக்கு செல்லும் பஸ்கள் வந்து நிற்கும் நடைமேடை பகுதியில் அரசு பஸ் கண்டக்டரின் சீருடை அணிந்தபடி வாலிபர் ஒருவர், பணப்பையுடன் சுற்றித்திரிந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பஸ் நிலைய நேர கண்காணிப்பாளர் சந்திரன், அந்த வாலிபரிடம் விசாரித்தார். அப்போது அவர், தான் அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருவதாகவும், தற்போது தான் பணிக்கு வந்ததாகவும் கூறினார். ஆனால் பகல் வேளையில் கம்பத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட தொலைதூர ஊர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்கள் இல்லாத நிலையில், சந்திரனுக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது. இதற்கிடையே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். இதனால் சந்திரன், பஸ் நிலையத்தில் இருந்த டிரைவர், கண்டக்டர்களுடன் சேர்ந்து தப்பி ஓட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரை கம்பம் அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர். அப்போது மேலாளர் அந்த வாலிபரிடம் விசாரித்தபோது, அவர் நெல்லையை சேர்ந்த சுடலைவேடியப்பன் (34) என்பதும், போலி அரசு கண்டக்டர் அடையாள அட்டை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசாருக்கு பணிமனை மேலாளர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், சுடலைவேடியப்பனிடம் விசாரித்தனர். அதேபோல் அவர் வைத்திருந்த பணப்பையை சோதனை செய்தனர். அதனுள், போலி கண்டக்டர் அடையாள அட்டை, அடையாள வில்லை, பஸ் டிக்கெட்டுகள், ஆதார் அட்டை ஆகியவை இருந்தது. இதையடுத்து அவர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் போலி அடையாள அட்டை எங்கிருந்து கிடைத்தது? கண்டக்டர் உடையணிந்து ஏமாற்றி பணம் பறிக்க வந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.