திருட்டு வழக்கில் தொடர்புடைய வாலிபர் சிக்கினார்


நாட்டறம்பள்ளி அருகே மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் வாலிபர் சிக்கினார். அவரிடமிருந்து 3½ பவுன் நகை, 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி அருகே மளிகை கடையில் இருந்த பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் வாலிபர் சிக்கினார். அவரிடமிருந்து 3½ பவுன் நகை, 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

வாலிபர் சிக்கினார்

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளி அருகே ஆலமரம் பஸ் நிறுத்தத்தில் நாட்டறம்பள்ளி- திருப்பத்தூர் சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். இதனையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் நாட்டறம்பள்ளி அருகே உள்ள கோனேரிகுப்பம் சமத்துபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்பவரது மகன் பாலாஜி (வயது 20) என்பது தெரியவந்தது.

நகை, மோட்டார்சைக்கிள் பறிமுதல்

மேலும் இவர் கடந்த ஜூலை மாதம் நாட்டறம்பள்ளி அருகே பையனப்பள்ளி பகுதியில் உள்ள விஜயகுமார் என்பவரது மனைவி வேடியம்மாள் மளிகைக் கடையில் இருந்த போது பொருட்கள் வாங்குவது போல் நடித்து, வேடியம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 3½ பவுன் நகையை திருடியதாக ஒப்புக்கொண்டார். இதேபோல் வாணியம்பாடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துமேடு, காவலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் நிலத்தில் இருந்த 150 மீட்டர் வயரை திருடியதாகவும் அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து அவர்மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். அவரிடமிருந்து 3½ பவுன் நகை மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள், வயர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.


Next Story